ஹெச்-1பி விசா பணியாளர்களை 'கொத்தடிமைகள்' என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய வார்த்தைப் பிரயோகத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது.
வாஷிங்டனில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய வேன்ஸ், "வெளிநாட்டுப் பணியாளர்களைக் கொச்சைப்படுத்துவது எனது நோக்கமல்ல. பணியாளர்களைச் சுரண்டி அவர்களைத் தாயகத்துக்கு திருப்பி அனுப்பும் அளவுக்கு முதலாளிகளுக்கு அதிகாரம் வழங்கும் தற்போதைய விசா முறையையே விமர்சித்தேன்.
அமெரிக்கத் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும். அதேநேரத்தில், திறமையான வெளிநாட்டுப் பணியாளர்களை அரவணைப்பதும் அவசியம்" என்றார்.
தனது சொல்லாடல் முறையற்றது என்பதை ஒப்புக்கொண்டுள்ள அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ், தனது விமர்சனம் முறையற்ற விசா நடைமுறையையும் நிறுவனங்களையுமே குறித்தது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.